Thursday, February 21, 2013

சமய குரவர் நால்வர்


மாணிக்கவாசகர்


மாணிக்கவாசகர்
            மாணிக்கவாசகர் சைவ சமய நாற்குறவர்களுள் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் பாடிய பாடல்கள் "திருவாசகம்" என அழைக்கப்படுகின்றன. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது. தமிழ் கற்ற மாணவனான ஜி.யூ.போப் இதற்கு தக்க சான்றாகும். "சிறை பெறா நீர் போல் சின்தை வாய்ப் பாயும் திருப்பெருந்துறையுறை சிவனே" என்பதாலும், "இமைப் பொழுதும் என் னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க." எனும் அடிகளால் தமிழின் அருட் திறத்தையும், வாதவூரரிற்கும் இறைவனுக்குமான நெருக்கத்தையும் உணரலாம். "நரியைக் குதிரைசெய்" எனும் திருநாவுக்கரசர் பாடல் மூலம் இவர் காலத்தால் அப்பருக்கு முந்தியவர் என கருதப்படுகிறது.

 வரலாறு
      இறைவன் அருளால் எல்லாத் தண்டனைகளையும் மாணிக்கவாசகர் தாங்கிக்கொண்டதைக் கண்ட அரசன் அவரை விடுதலை செய்தான். அவர் திருப்பெருந்துறைக்குச் சென்று அங்கு சில காலம் தங்கியிருந்துவிட்டுப் பின்னர் தல யாத்திரையில் ஈடுபட்டார். ஞான நெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில் சாயுச்சிய முக்கியடைந்தார் (சிவனடி சேர்ந்தார்).
       தல புராணத்திலிருந்து திரட்டிய தகவல்களாக அபிதான சிந்தாமணி கூறுவது: "திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராகப் பதவி அமர்ந்தார் அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டுவந்தான். தன் புலமையால் "தென்னவன் பிரம ராயன்" எனும் பட்டத்தையும் பெற்றார்.
       உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு மேற்கொண்டு ஒழுகி வரலானார்.
       ஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு, அமைச்சர் வாதவூராரிடம் பொன் கொடுத்து, அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படிப் பாண்டிய மன்னன் பணித்தான்.
        வாதவூரார் பொன்னோரு திருப்பெருந்துறையை (அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவில்) அடைந்தார். அங்கே இருந்த குருந்த மரத்தின் அடியில் சிவபெருமானே குருவடிவு எடுத்து அமர்ந்திருந்தார். அவர்முன் சென்று வாதவூரார் பணிந்தார். குருவின் திருக்கரத்தில் இருப்பது என்னவென்று வாதவூரார் கேட்க, அவர் சிவஞான போதம் என்றார்.(இது மெய்கண்டார் எழுதிய "சிவஞான போதம் அல்ல)
           'சிவம் என்பதும், ஞானம் என்பதும், போதம் என்பதும் யாது? அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன்' என்றார் பக்குவமடைந்திருந்த வாதவூரார். சிவஞானத்தை அவருக்கு போதித்து, திருவடி தீட்சையும் கொடுத்தார் குருமூர்த்தி வடிவத்தில் வந்த சிவபிரான்.
       தன் மந்திரிக் கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு, வாய்பொத்திக் குருவின் முன் வாய்பொத்தி நின்ற வாதவூராரை, அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்துவிட்டார் வாதவூரார்.
      பாண்டியன் ஒற்றர்களிடம் திருமுகம் (அரசனின் ஆணை தாங்கிய ஓலை) கொடுத்துக் கையோடு வாதவூராரை அழைத்துவரக் கட்டளையிட்டான்.
       'குருமூர்த்தியின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை' என்று கூறி வாதவூரார் அதனைக் குருவிடமே கொடுத்துவிட்டார். அதைப் படித்த குருமூர்த்தி,


ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்து 'குதிரைகள் வர நல்ல நாளில்லை. ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல்' என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார்.
        சொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்துகொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் 'எங்குமே குதிரைகள் தென்படவில்லை' என்ற செய்தியோடு திரும்பினர்.
       ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை. 'இன்றைக்குள் குதிரைகள் வராவிட்டால் உம்மை வெயிலில் நிறுத்துவேன்' என்று கூறிப் பாண்டிய மன்னன் வாதவூராரை எரிக்கும் வெய்யிலில் நிறுத்தினான். அதற்கும் வாதவூரார் அசையவில்லை. இரும்புக் கிட்டியால் (iron clamps) இறுக்கினர். வாதவூரார் சிவனை தஞ்சம் அடைந்தார்.
       உடனே சிவபெருமானின் சிவகணங்களை குதிரை வீரர்களாகவும், நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி, தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். இதனாலே இறைவனுக்கு பரிமேலழகர் எனும் கரணியப் பெயர் ஏற்பட்டது.


          ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றினான்.
       குதிரைப் அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி, அவற்றின் உறுப்புச் சிறப்பைக் கூறி, 'இவை உன்னுடையவை' என்று கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கி, குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான்.
       அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி, முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்துவிட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூராரை வைகையாற்று சுடுமணலில் நிறுத்தி வைக்குமாறு கூறினான்.
        சிவபெருமானுக்கு அடியவரின் துன்பம் பொறுக்க வில்லை. கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார். கரையை உடைத்துக்கொண்டு ஆறு பெருக்கெடுக்கத் தொடங்கிவிட்டது.
      உடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்கவேண்டும் என்று முரசு அறைவிக்கிறான். வந்திக் கிழவி எனும் ஒரே ஒருவள் மட்டும் வீட்டிலும் யாருமில்லாமலும்,


 ஏவலாளரும் இல்லாமல் யோசித்துக் கொன்டிருக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து வேலை செய்யட்டுமா என்று கேட்கிறார். "செய், ஆனால் நான் கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன்" என்று வந்தி கூறுகிறாள். அதற்கு உடன்பட்ட சிவபெருமான் தனது 'வேலையைத்' தொடங்குகிறார்.
       அன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு, மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான். மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது.
        கோபம் கொண்ட அரசன் கூலியாளைப் பிரம்பால் அடித்தான். கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட, அது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி உலகெல்லாம் உள்ள அனைத்து உயிர்களின் மேலும், கருவில் இருந்த குழந்தை மீதும், படவே பாண்டியன் கலங்கிப் போனான்.
      அப்போது சிவபிரானின் குரல் அசரீரியாய் கேட்டது, 'மன்னவா! வாதவூராரின் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய்' என்று அக்குரல் சொல்லிற்று. மன்னன் மீண்டும் வாதவூரடிகளைத் தனக்கு மந்திரியாக இருக்க வேண்டினான்.


      அவருக்கு அந்த ஆசை சிறிதும் இல்லாமையால், சிவத்தலங்களுக்குச் சென்று பாடித் துதித்துப் பின் திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்துக்கு வந்தார். அங்கும் சிவபிரான் அவர்முன்னர் ஒரு வேதியர் போல வந்தார். அவரை வரவேற்று வணங்கி 'தாங்கள் யாரோ?' என்று வாதவூரார் கேட்டார்.
'   நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை ஓத வந்தேன்' என்று அந்தணர் கூறினார்.    'நான் சொல்கிறேன், நீர் அவற்றை எழுதும்' என்று கூறினார் திருவாதவூரார்.
     அதற்கு ஒப்புக்கொண்ட அந்தணர் பலப்பல செய்யுட்களை எழுதி முடித்தார். இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார்.
     முடித்ததும், ஓலைச்சுவடியின் முடிவில் 'மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன்' என்று கையொப்பமிட்டு, திருமுறையைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். அதைப் பார்த்த ஒருவர் அவ்வேடுகளை எடுத்துப் பார்க்க, அது திருவாசகமும், திருக்கோவையும் கொண்ட சுவடியாய் இருந்தது. மிகவும் மனம் மகிழ்ந்த அவர் தில்லை மூவாயிரவரைக் கூட்டிப் பூசைகள் செய்தார். மூவாயிரவர் நடந்த நிகழ்ச்சிகளின் பொருள் என்ன என்று வாதவூராரைக் கேட்டனர்.


 அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்துக்கு அழைத்துச் சென்ற வாதவூரார் பொருள் இதுவே என்று கூறித் தில்லையம்பலத்தைக் காட்டி மறைந்தார்.
இவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், தென்னவன் பிரமராயன் என்ற பெயர்களும் உண்டு.
அற்புதங்கள்
1.     சிவபெருமானே நரியைக் குதிரையாக்கிக் கொண்டு வரும்படியும் மண்சுமந்து அடிபடும் படியும் நடந்து கொண்டது.
2.     பிறவி தொட்டு ஊமையாயிருந்த பெண்ணைப் பேசவைத்தமை.
3.     தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து எழுதும் பேறு பெற்றுக்கொண்டது.
4.     எல்லாரும் காணத்தக்கதாக திருச்சபையினுள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது.
இவற்றிற்கு உசாத்துணை ஏதுமில்லை.

சுந்தரமூர்த்தி நாயனார்


சுந்தரமூர்த்தி நாயனார்
        திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த திருநாவலூரில், ஆதி சைவ குலத்தில் சுந்தரர் பிறந்தார். இவரது தந்தையார் சடையனார், தாயார் இசைஞானியார். மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்குவந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தாராம். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், "பித்தா பிறை சூடி" என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பின்னர் இறை தொண்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
       சிவத் தலங்கள் தோறும் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி இறவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டாராம். "நீள நினைந்தடியேன்" என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான் பெற்ற நெல்லை தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம்.
         இறைவனுடைய உதவி பெற்றே பரவையார், சங்கிலியார் என்ற இரு பெண்களை மணம் புரிந்ததாகக் கூறப்படுகிறது. அரசரான சேரமான் பெருமாள் இவருக்கு நண்பராயிருந்தார். தனது 18 ஆவது வயதில் இவர் சிவனடி சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது.
        இவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும். இவர் பாடிய தேவாரங்கள் 7 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலில் 63 நாயன்மார் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
அற்புதங்கள்
1.     செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது
2.     சிவபெருமான் கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னை விருத்தாச்சலத்தில் உள்ள ஆற்றிலே போட்டு திருவாரூர்க் குளத்தில் எடுத்தது.
3.     காவிரியாறு பிரிந்து வழிவிடச் செய்தது.
4.     முதலை விழுங்கிய பிராமணப்பெண்ணை அம்முதலையின் வாயின்று அழைத்துக் கொடுத்தது.
5.     வெள்ளை யானையில் ஏறி திருக்கைலாசத்திற்கு எழுந்தருளியது.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்


திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
       திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (தமிழில் அறிவுசேரர் என்று பொருள் தரும்.), அல்லது சம்பந்தர் தமிழ்நாட்டில், சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதல் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார். இவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில், பிராமணக் குடும்பத்திற் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாதவிருதயர், தாயார் பகவதி அம்மையார்.
      இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை அம்மையே அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது உமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது. குளித்துவிட்டு வெளியே வந்த தந்தையார், பிள்ளையின் வாயிலிருந்து பால் வடிவதைக் கவனித்து, அது குறித்துக் கேட்கவே கோயிலிலுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டித் "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் தனது முதல் தேவாரத்தைத் திருஞானசம்பந்தர் பாடினார் என்பது தொன்நம்பிக்கை.
        சம்பந்தமூர்த்தி சுவாமிகள் பாடிய தலங்களுள் முக்கியமான தலம் மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் ஆகும். இக் கோயிலை அவர் கரக்கோயில் எனப் பாடியுள்ளார். தமிழ்நாட்டில் கரக்கோயில் எனப்படும் ஒரே கோயில் மேலக்கடம்பூர் மட்டுமே.
அற்புதங்கள்
  • மூன்றாம் வயதினிலே உமையம்மையாரிடம் திருமுலைப்பால் உண்டமை.
  • சிவபெருமானிடத்தே பொற்றாளமும், முத்துப்பல்லக்கும், முத்துச்சின்னமும், முத்துக்குடையும், முத்துப்பந்தரும், உலவாக் கிளியும் பெற்றது. வேதாரணியத்திலே திருக்கதவு அடைக்கப்பாடியது.
  • சமணர்களை வெற்றி கொள்ள வேண்டி மதுரை சென்ற போது, மதுரைக்குக் கிழக்கு வாயில் வழியாகச் செல்ல வேண்டும் என்று கருதி, மதுரையின் கிழக்கு எல்லையாக விளங்கும் திருப்பூவணத்தின் (தற்போது திருப்புவனம் என்று அழைக்கப்படுகிறது)வைகை ஆற்றின் வடகரையை வந்து அடைந்தார்,

  •  ஆற்றில் கால் வைக்க முயன்ற போது ஆற்று மணல்கள் எல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சி அளித்தன, எனவே அங்கு நின்றபடியே தென்திருப்பூவணமே என முடியும் பதிகம் பாடினார், சிவபெருமான் நந்தியை சாய்ந்திருக்கச் சொல்லி காட்சி அருளினார், இதனால் திருப்பூவணத்திலே நந்தி இன்றும் முதுகு சாய்ந்தே உள்ளது. வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள சிவலிங்கத்தை வடகரையில் உள்ள ஆடித்தபசு மண்டபத்தில் நின்றே இன்றும் தரிசிக்கலாம். வைகை ஆற்றின் குறுக்கே ஆயிரக்கணக்கான சிவலிங்கங்கள் புதையுண்டு கிடக்கின்றன, அவற்றை இன்றும் மக்கள் கண்டெடுக்கின்றனர்.
  • அபாலை நிலத்தை நெய்தல் நிலமாகும்படி பாடியது.
  • பாண்டியனுக்குக் கூனையும் சுரத்தையும் போக்கியது. தேவாரத் திருவேட்டை அக்கினியில் இட்டுப் பச்சையாய் எடுத்தது. வைகையிலே திருவேட்டை விட்டு எதிரேறும்படி செய்தது. சிவபெருமானிடத்தே படிக்காசு பெற்றது.
  • விடத்தினால் இறந்த வணிகனை உயிர்ப்பித்தது.

திருநாவுக்கரசு நாயனார்


திருநாவுக்கரசு நாயனார்
அப்பர் சுவாமிகள் கட்டமுதுத் திருமண்டபம்
திருஞானசம்பந்தரை பல்லக்கில் சுமக்கும் அப்பர்


        திருநாவுக்கரசு நாயனார்கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவர் ஆவார். இவர், அப்பர், திருநாவுக்கரசர் என்னும் சிறப்புப் பெயர்களாலும் வழங்கப் பெறுகிறார். இவருக்குத் தாய் தந்தையர் இட்ட பெயர் மருணீக்கியார். தற்போதைய வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள திருவாமூரில் ஒரு சைவக் குடும்பத்தில் வேளாண் குலத்தில் தந்தையார் புகழனாருக்கும் தாயார் மாதினியாருக்கும் புதல்வனகப் பிறந்தவர். தனது இளமைப் பருவத்தில் சைவத்தை விட்டு சமண சமயத்தில் சேர்ந்தார். சமண நூல்களைக் கற்று அச்சமயத்தின் தலைவர்களுள் ஒருவராகவும் விளங்கினார். சமண சமயத்தில் இருந்தபோது திருநாவுக்கரசர் தருமசேனர் என்றழைக்கப்பட்டார்
        திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதியார் ஆவார்.இவர் சிறந்த சிவபக்தராக இருந்தார். தனது தம்பி சமணத்தில் சேர்ந்ததை எண்ணி மிகவும் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டு வந்தார். இதனால் மருணீக்கியாருக்குக் கடுமையான சூலை நோய் ஏற்பட்டது. சமண மடத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகள் எதுவும் பலனளிக்கவில்லை. பின்னர் திலகவதியிடம் முறையிட்டார்.திலகவதி சிவனிடம் மனம் உருகிப் பாடச் சொன்னார்.திருநாவுக்கரசர் "கூற்றாயினவாறு விலக்ககலீர்" என்று தொடங்கும் தேவாரப் பதிகத்தைப் பாடி முறையிட்டதில் நோய் தீர்ந்தது. இதனால் மருணீக்கியார் சைவத்துக்கு மீண்டார். இதன் பின்னர் இவர் நாவுக்கரசர் என அழைக்கப்பட்டார்.
        
  இவர் தொண்டு வழியில் இறைவனை வழிபட்டவர். பல்வேறு ஊர்களுக்கும் பயணம் செய்து, தேவாரப் பதிகங்களைப் பாடி சைவப் பணியில் ஈடுபட்டார். கோயில்களின் சுற்றாடலை உழவாரங் கொண்டுதூய்மைப் படுத்தியும் வந்தார். இதனால் இவர் உழவாரத்தொண்டர் எனவும் அழைக்கப்பட்டார். சமணப் பிடிப்போடு இருந்த பல்லவ மன்னனான மகேந்திர பல்லவன் திருநாவுக்கரசரைப் பல்விதத்திலும் துன்புறுத்தினான். அத்துன்பங்கள் யாவற்றையும் திருநாவுக்கரசர் தனது இறைவலிமையோடு வென்றார். கற்றுணைப் பூட்டியோர் கடலினுள் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாயவேஎன்னும் நமச்சிவாயப் பதிகம் இதனை மெய்ப்பிக்கிறது. இறுதியில் பல்லவப் பேரரசனான மகேந்திர பல்லவன்ச் சைவ சமயத்திற்கு மாறினான்.
         தனது முதிர்ந்த வயதில் சிறுவராயிருந்த திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாருடன் சேர்ந்து தல யாத்திரைகள் செய்தார். மேலும் திருஞானசம்பந்தரால் அப்பர் எனவும் அழைக்கப்பட்டார். இவர் பாடிய தேவாரப் பாடல்கள் 4, 5, 6 ஆகிய மூன்று திருமுறைகளில் வகுக்கப்பட்டுள்ளன. சமயத் தொண்டு புரிந்த திருநாவுக்கரசர் 81ஆவது வயதில் திருப்புகலூரில் சித்திரைச் சதயத்தில் உயிர் நீத்தார்.
        அவர் பாடிய தலங்களில் முக்கியமான தலம் மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் ஆகும். இஙகு அவர் என் கடன் பணி செய்துகிடப்பதே என்னும் வரிகளைப் பாடி அருளினார். மேலும் அவர் கரக்கோயில் என இத்தலத்தினை பாடியுள்ளார். ஒன்பது வகைக் கோயில்களில் கரக்கோயில் என போற்ற்ப்படும் ஒரே தலம் மேலக்கடம்பூர் ஆகும்.
அற்புதங்கள்
  • சமணர்களாலே 7 நாட்கள் சுண்ணாம்பு அறையில் அடைத்து வைத்திருந்தும் வேகாது உயிர் பிழைத்தார்
  • சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டும் சாகாது உயிர் பிழைத்தார்
  • சமணர்கள் விடுத்த கொலை யானை வலம் வந்து வணங்கிச் சென்றது
  • சமணர்கள் கல்லிற் சேர்த்துக்கட்டிக் கடலில் விடவும் அக்கல்லே தோணியாகக் கரையேறியது.
  • சிவபெருமானிடத்தே படிக்காசு பெற்றது
  • வேதாரணியத்திலே திருக்கதவு திறக்கப் பாடியது.
  • விடத்தினால் இறந்த மூத்ததிருநாவுக்கரசை உயிர்ப்பித்தது
  • காசிக்கு அப்பால் உள்ள ஒரு தடாகத்தினுள்ளே மூழ்கி திருவையாற்றிலே ஒரு வாவியின் மேலே தோன்றிக் கரையேறியது.